சனி, 13 மார்ச், 2010

வினைச்சொல் காலங் காட்டுதல்

வினைச்சொல் காலங் காட்டுதல்

வினைச்சொல் செயலை உணர்த்தும். வினைமுற்றுகள் பெரும்பாலும் இடைநிலைகளால் காலங் காட்டும். விகுதியாலும், பகுதி இரட்டித்தும் காலங் காட்டுவதுமுண்டு. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் காலம் மூன்று வகைப்படும்.

இறந்தகாலம் - இதன் இடைநிலைகள் ட், த், ற், இன், ன்

எ-கா:
உண்டான் - உண் - ட் - ஆன்
செய்தான் - செய் - த் - ஆன்
கற்றாள் - கல் - ற் - ஆள்
ஓடின – ஓடு - இன் - அ
போனான் - போ – ன் - ஆள்

நிகழ்காலம் - இதன் இடைநிலைகள் கிறு, கின்று, என்பனவாகும்.
எ-கா:
செய்கிறாள் - செய் - கிறு – ஆள்
உண்கின்றாள் - உண் - கின்று – ஆள்

எதிர்காலம் - இதன் இடைநிலைகள் ப், வ் என்பனவாகும்.
எ-கா:
உண்பான் - உண் - ப் - ஆன்
செய்வான் - செய் - வ் - ஆன்

வினைமுற்றுகள் யாவும் மூன்று காலங்களுக்கும் உரியனவாய் உள்ளன. சிறுவர்கள் பாட்டுப் பாடினார்கள், சிறுவர்கள் பாட்டுப் பாடுகின்றார்கள், சிறுவர்கள் பாட்டுப் பாடுவார்கள் எனும் போது, பாடு என்னும் வினையடியிலிருந்து பிறக்கும் வினைமுற்றுகள் மூன்று காலங்களிலும் வந்துள்ளமையை அறியலாம்.